search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி கமிஷனர்"

    ரவுடியிடம் ரூ.5 லட்சம் கேட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை அண்ணாநகரில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமி‌ஷனராக கடந்த ஆண்டு பணிபுரிந்தவர் முத்தழகு. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பணியில் சேர்ந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் வரையில் உதவி கமி‌ஷனராக பணியாற்றினார்.

    தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராமபுரம் சமஸ்தான வாரிசான கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி சொத்தை அபகரிக்க ரவுடிகள் சிலர் முயற்சி செய்தனர்.

    இதுதொடர்பான குற்றச்சாட்டை உதவி கமி‌ஷனர் முத்தழகு விசாரித்தார். அப்போது ரவுடிகள் ஒருவனை கைது செய்யாமல் இருக்க அவர் ரூ.5 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக ரவுடியின் சகோதரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இறுதியில் ரூ.3½ லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    உதவிகமி‌ஷனர் முத்தழகு பேசியதாக கூறப்படும் ஆடியோ வாட்ஸ்அப்- பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட முத்தழகு பின்னர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படையில் பணி அமர்த்தப்பட்டார்.

    அங்கு உதவி கமாண்டராக பணியில் உள்ளார். ஆடியோ வெளியானதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்தழகு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். ஆடியோவில் இருப்பது முத்தழகுவின் குரல்தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவருக்கு குரல் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாநகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உதவிகமி‌ஷனர் முத்தழகு 1987-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

    பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி கமி‌ஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சென்னை போலீஸ் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமான அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது சக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrafficPolice
    சென்னை:

    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் முறைப்படி அபராதம் விதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

    குறிப்பாக போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை வழிமறித்து நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். காவல் துறையில் இது தீராத கறையாகவே படிந்துள்ளது.

    போக்குவரத்து போலீசாரின் இந்த முறைகேடான நடவடிக்கை காரணமாக பல இடங்களில் வாகன ஓட்டிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியுள்ளன.

    இதனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து போலீசார் மீது படிந்துள்ள லஞ்ச புகார் கறையை போக்க சென்னை போலீஸ் அதிகாரிகள் கடந்த மே மாதம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பணம் வசூலிக்கும் முறைக்கு முடிவு கட்டினர். ரொக்கமில்லா பணபரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினர்.

    புதிய திட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியிடம் ரொக்கமாக பணம் வாங்க கூடாது என்றும் அதனை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருண் ஆகியோர் போக்குவரத்து போலீசாருக்கு சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தனர்.

    புதிய நடைமுறையின்படி வாகன ஓட்டிகளிடம் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பெரும் அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பே.டி.எம்., அஞ்சலகம், இ-சேவை மையம் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


    சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் இதனை பின்பற்றியே வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இந்த விதிமுறையை மீறி முறைகேடாக வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் அருண் அதனை கண்காணிப்பதற்கு தனிப்படைகள் அமைத்தார். இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து போலீசார் பல இடங்களில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை மீறி லஞ்சமாக பொது மக்களிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ஏட்டு, ஆகியோர் கையும் களவுமாக கேமரா மூலமாக சிக்கியுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுக்குள்ளான சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, முருகன், இருதயராஜ், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    அவர்கள் மீது விரைவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.

    இதற்கிடையே லஞ்ச புகாரில் போக்குவரத்து போலீசார் சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தென்னரசு, ஏட்டு வெங்கடாசலம், தண்டையார்பேட்டை போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேற்று முன்தினம் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை எல்லையம்மன் கோவில் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஏட்டு வெங்கடாசலம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்துள்ளார். அவரிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கி கொண்டு 1,800 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார்.

    இதன் மூலம் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து ரூ.200 லஞ்சமாக பெற்றது அம்பலமானது. இதனை தொடர்ந்து 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் இ-செலான் மூலம் ரூ.100 அபராதம் விதித்து விட்டு 200 ரூபாய் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் பரவியுள்ளது.

    லஞ்ச புகாரில் சிக்கியுள்ள அடையாறு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இருதய ராஜ் விபத்து வழக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பொறியில் சிக்கியது போல பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த நடவடிக்கை தொடரும். எனவே போக்குவரத்து போலீசார் பொது மக்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
    ×